<$BlogRSDURL$>

Saturday, March 20

முதலில் மன்னிப்பு.

தினமும் எழுத முயற்சிக்கிறேன் என்று சொல்லி இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். மூன்று நாள்களாய் ஒன்றும் எழுதவில்லை. நான் படித்துக்கொண்டிருக்கும் ஒரு படிப்பின் பிராக்டிகல் கிளாஸ் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கான தயாரிப்புகள், பிராஜக்ட் சப்மிஷன் என்று பெண்டு கழட்டிவிட்டார்கள். நேற்று எழுதலாம் என்று வந்து உட்கார்ந்தேன். மரத்தடி இணையக் குழுவில் நண்பர் இரா.முருகனை விமர்சித்து பிகே சிவகுமார் எழுதியிருந்த ஒரு கடிதத்தையும் அதனைத் தொடர்ந்து நடந்த விவாதங்களையும் படிக்க நேர்ந்தது. அப்புறம் புத்தி ஓடவில்லை.

சிவகுமாருக்கு கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், அவரது கடிதத்தை மீண்டும் படித்தபோது, இன்றைய நாளின் சில மனநிலைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது.

1. இன்றைக்கு யாருக்கும் அட்வைஸ் பிடிப்பதில்லை. அட்வைஸ் செய்பவர்களையும் பிடிப்பதில்லை. அட்வைஸ் அவசியமற்றுப் போய்விட்டதோடு, சகிக்கமுடியாமலும் ஆகிக்கொண்டிருக்கிறது.

2. இணையம் என்ற ஊடகம், மனிதர்களைக் காட்டுவதில் உள்ள தோற்றக் குறை எப்படிப்பட்டது என்பதை இங்கே காணமுடிந்தது. பி.கே.சிவகுமார் என்ற மனிதரை நான் அறியேன். அப்படியே, அவர், முருகனையோ, ஹரிக் கிருஷ்ணனையோ அறியார். எல்லாரும் அறிந்தது, அவரவர்களின் எழுத்துக்களைத்தான். எழுத்துக்கள், எவ்வளவு குறைபட்டுக் கிடக்கிறது என்பதை என்னால், இங்கே புரிந்துகொள்ள முடிந்தது.

3. சிவகுமாரின் சில சொற்கள் எனக்குச் சிரிப்பைத்தான் வரவழைத்தன.

"...இரா.முருகனுக்குப் போட்டி நம்மை விட்டுவிட்டு நல்லபடியாக நடந்து முடிந்து வேறு யாரும் பேர் வாங்கி விடுவார்களோ என்ற பயம் ..."

"...அடுத்தவர்கள் நடத்துவதை வாழ்த்துவோம், நம்மால் முடிந்ததை நாமும் செய்வோம் என்கிற எந்த நல்ல எண்ணமும் இல்லாமல், மரத்தடிக்கு முருகன் கொடுத்த தொல்லைகள் கொஞ்சமல்ல..."

4. ஒன்றை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரே கட்டடத்தில் மேலும் கீழுமாக நானும் முருகனும் பணியாற்றியிருக்கிறோம். அதற்கு முன்பிருந்தே, அவரது எழுத்தின் மூலம் அறிமுகம் கிடைத்து, பழகி புரிந்துகொண்டிருக்கிறோம். முருகன் ஒரு வெகுளி. படபடவென பேசத் தெரியும். எழுதத் தெரியும். மரத்தடிக் குழு பற்றியும், அங்குள்ள சந்திரமதி மற்றும் உறுப்பினர்கள் பற்றியும் அவர் கொண்டிருந்த அக்கறை அபரிமிதமானது. 'நவீன இலக்கியத்துக்கு வரும் புதிய உற்சாகமான தலைமுறை அது' என்றும், அவர்களை மேன்மேலும் உற்சாகப்படுத்துவதும், நல்ல எழுத்துக்களை அறிமுகப்படுத்துவதும் அவசியம் என்றும் எங்கள் டைடல் பார்க் தினசரி ·புட்கோர்ட் சந்திப்புகளில் அவர் கூறியிருக்கிறார். இன்றைக்கு அதே முருகன், நான் இணையக்குழுவில் எழுத வந்ததே தவறு என்று பொருள்படும்படி, இராயர் காபிக் கிளிப்பில் எழுதியிருக்கிறார். படிக்க வேதனையாக இருந்தது.

5. பெறப்படும் நீதி யாதெனில்: அவரவர்க்கென்று ஒரு பாதை உண்டு. யாரும் யாருடையதையும் போய் செப்பனிட்டுவிட முடியாது. முருகன் முந்திரிக்கொட்டையாக (மன்னிக்க வேண்டும் முருகன்!) போய், மரத்தடி நண்பர்களையும் தம் சகோதரர்கள் போல் பாவித்து, உரிமை எடுத்துக்கொண்டது தவறு. அந்தத் தவறுதான் சிவகுமார் சொல்வது போல், "....மரத்தடிக்கு முருகன் கொடுத்த தொல்லைகள்..." ஆகப் பரிணமித்திருக்கிறது!!!

6. உங்களுக்குத் இது தேவையா முருகன்? நீங்கள் கடிந்துகொண்டாலும், திட்டினாலும், முறைத்துக்கொண்டு பரதேசம் போனாலும், உங்களை இழுத்துக்கொண்டு வரும் பொறுப்பை இங்கே ஒரு மூன்று நான்கு பேர் செய்யக் காத்திருக்கிறோம். அது உங்கள் எழுத்தின் மேல் உள்ள மதிப்புக்காக.

7. சிவகுமாருக்குச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. எல்லாம் முருகனுக்குத்தான். அதனால்தான், சிவகுமாருக்கு எழுதுவதை விட, முருகனுக்கு எழுதலாம் என்று இதை எழுதி என் வலைப்பதிவில் போடுகிறேன்.

8. மீண்டும் மன்னிக்க. மக்களைத் தேர்தல் பற்றி பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு, வேறு பொருத்தமற்ற விஷயத்தைப் பேசியிருக்கிறேன். பொருத்தருள்க.

வெங்கடேஷ்

|

This page is powered by Blogger. Isn't yours?


free hit counter
தேர்தல் செய்திகள்
களஞ்சியம்
Weblog Commenting and Trackback by HaloScan.com