<$BlogRSDURL$>

Monday, March 29

ரஜினி முடிவு: யாருக்கு லாபம்? 

கடைசியில் ரஜினியின் அறிவிப்பு வந்துவிட்டது. அகில இந்திய ரஜினி ரசிகர்கள் மன்ற பொறுப்பாளர் சத்யநாராயணா, நேற்று புதுவையில் பேசும்போது, பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக, அது போட்டியிடும் 6 தொகுதியிலும் எதிர்த்துப் பிரச்சாராம் செய்து தோற்கடிப்போம் என்று கூறியிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வந்தபோதில் இருந்தே, ரஜினியின் நிலை என்னவாக இருக்கும் என்று பேச்சுக்கள் உலா வரத் தொடங்கின. பா.ஜ.க.வுக்கு ஆதரவு நிலையையே அவர் எடுப்பார் என்று கருதப்பட்டு வந்தது. அதற்கு முன்னர், அவரது தொண்டர்கள், பா.ம.க.வினரால் பல இடங்களில் தாக்கப்பட்டனர். அத்துடன், டாக்டர் ராமதாஸ், பல இடங்களில் ரஜினியைத் தரக்குறைவாகப் பேசியும் வந்திருக்கிறார்.

சில நாள்களுக்கு முன் வந்த பத்திரிகை பேட்டியொன்றில், ரஜினியோடு பேசி சமரசம் ஏற்பட்டு விட்டது என்று டாக்டர் அன்புமணி கூறியிருந்தார். ஆனால், நேற்றைய பேட்டியில், சத்யநாராயணா அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடைபெறவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

ஒரு தேர்தல் என்று வரும்போது, வெற்றி தோல்வியையை நிர்ணயிக்க பல்வேறு சக்திகள் செயல்படுகின்றன. தமது நடிப்பால், பல லட்சம் ரசிகர்களைப் பெற்றுள்ள ரஜினியும் அத்தகைய ஓர் சக்தியாக வளர்ந்து வந்திருப்பதாக நம்பப்படுகிறது. 1996 சட்டசபைத் தேர்தலில் அவரது குரல் எடுபட்டது. அன்றைய நிலையில், பெருவாரியான மக்களின் மனநிலை ஜெயலலிதாவுக்கு எதிரானதாக இருந்தது. அதையே, ரஜினி பிரதிபலித்ததாகவும் கூறுவோர் உண்டு.

பின்னர், 1999 மக்களவைத் தேர்தல் மற்றும் 2001 சட்டசபைத் தேர்தல்களில் அவர் பங்கேற்கவில்லை. ஏதும் கருத்து சொல்லாமலே தவிர்த்துவிட்டார்.

ரஜினியின் பாபா திரைப்படம் வெளியானபோது, பா.ம.க.வினர் ஏற்படுத்திய சேதம், ரஜினியையும் அவரது ரசிகர்களையும் பெரிதும் பாதித்துள்ளது. இந்தத் தேர்தலில் அவர்களுக்குப் பாடம் கற்பிக்கவே, இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருப்பதாக மன்ற பொறுப்பாளர் பேசியிருக்கிறார். தேவைப்பட்டால், தானே நேரில் பிரச்சாரம் செய்யவும் தயாராக இருப்பதாகவும் பேசியிருக்கிறார்.

பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளில் மூன்றில் பா.ஜ.க.வும், மூன்றில் அ.தி.மு.க.வும் எதிர்த்துப் போட்டியிடுகிறது. ரஜினியின் இந்த எதிர்ப்பு, எதிரணியினருக்கு பெரும் பலமாக அமையும் என்று அனைவரும் கருதுகின்றனர்.

இதுநடுவே, கலைஞர் - ரஜினி சந்திப்பு நடந்துவிட்டால், இந்தத் பிரச்சினை தவிர்க்கப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

எது எப்படியோ, சத்யநாராயணாவின் இந்த அறிவிப்பு, சில செய்திகளைப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறது.

1. ரஜினி, அதிமுகவைச் சகித்துக்கொள்ளத் தயாராகிவிட்டார்.
2. அதன்மூலம், தி.மு.க தொண்டர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ளவும் தயாராகிவிட்டார்.
3. தனக்கு என்று ஒரு தொண்டர் சக்தி இருக்கிறது, அதன் பரிமாணம் என்ன என்பதைப் புரியவைத்துவிடும் வேகம் தெரிகிறது.

ஆனால், ரஜினியில் இந்த முடிவை வேறு கண்கொண்டு பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். பதிலுக்கு பதில் என்று இந்த மோதல் தொடருமானால், மனக்கசப்பு தீரப்போவதில்லை. இன்று, ரஜினியினாலோ அல்லது வேறு காரணங்களாலோ பா.ம.க வேட்பார்கள் தோற்றார்களெனில், நாளை அவர்கள் வெறுமனே இருப்பார்கள் என்று நம்புவதற்கில்லை. ரஜினியின் அடுத்த படத்திற்கு மீண்டும் தொல்லை கொடுக்கமாட்டார்கள் என்று எந்த நிச்சயமுமில்லை.

ஏதோ ஒரு தரப்பு, இதை விட்டுக்கொடுத்து, சமாதானம் பயிலுவதே பிரச்சினைக்குத் தீர்வு என்று கருதுபவர்களும் உண்டு.

எது எப்படியோ, பத்திரிகைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குக் கொண்டாட்டம்தான். பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிவிடப் போகிறார்கள்.
|

This page is powered by Blogger. Isn't yours?


free hit counter
தேர்தல் செய்திகள்
களஞ்சியம்
Weblog Commenting and Trackback by HaloScan.com