<$BlogRSDURL$>

Friday, April 2

அரசியலை விமர்சிக்க நமக்குத் தகுதியுண்டா? 

விடிகாலை. நடப்பதற்காக கடற்கரைக்குப் போக, ஒரு கூட்டம் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. அருகே நெருங்கிப் போக, முதுகில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி.சர்ட்டுகள் அணிந்த கட்சிக்காரர்கள். கடற்கரையின் நடைபாதையை அடைத்துக்கொண்டு மெல்ல நகரும் கூட்டம். யாரென்று புரியாமல், நானும் விறுவிறுவென நடந்துபோகத் தொடங்கினேன்.

எனக்கு முன் போனவர்களும் சரி, பின்னார் வருபவர்களும் சரி, அந்தக் கூட்டத்தை லாவகமாய்த் தவிர்த்துவிட்டு, வளைந்து சட்டென கூட்டத்தின் முன்னே போய், மீண்டும் தம் அன்றாட உடல்நலத்தைப் பேணும் அவசரத்தில் வேர்க்க விறுவிறுக்க நடந்துகொண்டிருந்தனர். நின்று பார்த்தவர்கள் நானும் ஒருவன்.

டி.ஆர். பாலு. எங்கள் தொகுதி மக்களவை வேட்பாளர். பக்கத்தில் உசேன். திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. நின்று கைகுலுக்க, 'படிச்சு பாருங்க சார்' என்று ஒரு துண்டறிக்கையைக் கொடுத்தார் பாலு. என்னைப் போல் ஓரம் நின்றுகொண்டிருந்தவர்கள், தெரிந்த ஒன்றிரண்டு முகங்களோடு கைகுலுக்கியபடி அவர் நடந்துகொண்டிருந்தார்.

துண்டறிக்கையை நான் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டேன். பலர், அப்படியே ஓரம் போட்டுவிட்டு நடையைக் கட்டினர். இன்னும் சிலர், தமக்கு இதெல்லாம் அநாவசியம் என்பதுபோல், முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டிந்தனர்.

நிம்மதியா கூட நடக்க விட மாட்டேங்கறாங்க.. இங்கியும் வந்துடறாங்க

எனக்குப் பின்னால் வந்த மாமி, அடிக்குரலில் மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். சில நொடிகளில் என்னைக் கடந்து மேலும் உடல்நலம் காக்க, ஓட்டமாக நடையைப் பயின்றுகொண்டிருந்தனர்.

மற்றொரு காட்சி. எங்கள் அடுக்ககத்தின் வாயிலில் கூட்டம். எம்ஜிஆர் திரைப்படப் பாடல்கள் யார் வருகிறார் என்பதற்குக் கட்டியம் கூறின. வாசலில் போய் நின்றுகொண்டேன்.

ஒரு திறந்த ஜீப்பில் பதர் சையது. அதிமுக தென்சென்னை வேட்பாளர். பக்கத்தில் டி.ஜெயக்குமார். சிரிக்கலாமா வேண்டாமா, கைகூப்ப வேண்டுமா, வேண்டாமா என்று தெரியாமல் பதர் சையது தேமே என்று உயர்ந்து நின்ற அடுக்ககங்களைப் பார்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார். அமைச்சர் ஜெயக்குமார்தான் அம்மா புகழ் பாடி ஓட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்.

கல்யாண ஊர்வலமாக இருந்தாலும் சரி, இழவு ஊர்வலமாக இருந்தாலும் சரி, பெருமாள் புறப்பாடாக இருந்தாலும் சரி, வெறுமனே எட்டிப் பார்க்கும் அடுக்கக முகங்கள் இப்போதும், பதர் சையதைப் பார்த்துக்கொண்டிருந்தன.

ஜெயலலிதா ஸ்கூல் ·பிரெண்டாம்..

புடைவை நன்னா அழகா இருக்கு இல்ல...

ஜீப் எங்கள் ஏரியாவின் புகழ்பெற்ற மீனவ 'நகர்'களின் உள்ளே நுழைய, அனைத்து முகங்களும் தம் வேலையைப் பார்க்கத் திரும்பிவிட்டன. ஆனால், ஜீப்போடு வந்தவர்கள், 'நகர்'களுக்கு உள்ளே போனதும், பட்டாசு வெடித்து, சரங்கள் கொளுத்தி, ஆரத்தி எடுத்து, கொண்டாட்டமாய் வரவேற்கத் தொடங்கினர். மணமகள் ஊர்வலம்போல், வாத்தியங்கள் முழங்க, அபாரமான ஏற்பாடுகள்.

இதுதான் வித்தியாசம். ஏற்கனவே, மேல் மத்திய தர வர்க்கம், அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொண்டு விட்டது. கடந்த பத்தாண்டுகளில், கீழ் மத்திய வர்க்கத்துக்கும் அரசியலோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

நான் இரவு பகலாக உழைக்கிறேன், எவனோ புண்ணியவான் என் திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பு கொடுத்து, வேலைகொடுத்திருக்கிறான். அவன் சோறு போடுகிறான். பின் நான் எதற்கு உனக்கு (அரசுக்கு) மதிப்பு தரவேண்டும்? உன்னிடம் நான் எதற்காகவும் வந்து நிற்கத் தயாரில்லை. நிலைமைகள் மாறிவிட்டன பாஸ்!!!

கடந்த பல தேர்தல்களில் வாக்குச் சதவிகிதம் குறைந்து வந்ததற்கு இதுவே முக்கியக் காரணம். இந்தியாவின் புகழ்மிக்க மத்திய வர்க்கமும் அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டது. கணினியும் தொழில்நுட்பமும் அவர்கள் பார்வையை மேல்நோக்கி உயர்த்திவிட, நாடாளுபவர்கள் நாசமாகப் போகக் கடவது என்ற விட்டுவிட்டார்கள்!!!

மிச்சமிருப்பது, தினக்கூலிகள், ஆலை உழைப்பாளர்கள், சிறு சிறு வேலைகள் செய்வோர் அடங்கிய அன்றாடம் காய்ச்சிகள். அவர்கள்தான் இன்னும் அரசையும் அரசியலாளர்களையும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். கூட்டம் கூட்டினால் பேச்சைக் கேட்க வருகிறார்கள். கையில் தலைவரின் முகத்தை பச்சைக் குத்திக்கொள்கிறார்கள். ஓட்டுச் சாவடிக்குப் போய், வெயிலில் நின்று தம் ஓட்டைப் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இதுதான் உண்மை.

மத்தியதர வர்க்கம், செளகரியத்திலும், வெட்டிப்பேச்சிலும் செயலின்மையிலும் ஆழ்ந்துகிடக்கிறது. உண்மையில், நமக்கெல்லாம், இந்த அரசை விமர்சிக்க தகுதியே இல்லை.

வெங்கடேஷ்
|

இப்படியும் ஒரு மனிதர்!! 

கொஞ்சம் மெயின் டிராக்கில் இருந்து தள்ளிப் போகிறேன். திட்டாதீர்கள்!!

பா. ராகவனின் வாத்தியாரோடு கச்சேரி பதிவை நீங்கள் எல்லாரும் படித்திருப்பீர்கள். அதன் ஹீரோவான வண்ணநிலவனோடு இன்று மாலை மீண்டும் பேசிக்கொண்டிருந்தேன். குரலில் தென்படும் கனிவுக்கு ஈடுஇணையே இல்லை.

அவர் எழுதப்போகும் நாவலின் அத்தியாங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு வாக்கில், அவர் தமிழ் சி·பியில் எழுதிய காலம் நாவலை ஏன் இன்னும் புத்தகமாக வெளியிடவில்லை, உடனே செய்யவேண்டியதுதானே... என்றேன்.

அந்த நாவலை அவருடைய நண்பர் ஒருவர் பிரசுரிக்க முன்னரே வாக்குகொடுத்துவிட்டதால், வேறு யாருக்கும் தராமல் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அந்த நண்பர் இப்போது, நல்ல நிலையில் இல்லை. ஆனால், அவர் மீண்டு வரும்வரை, வண்ணநிலவன் நாவலை வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.

"உங்க கட்டுரையெல்லாம் கூடத் தொகுக்கலாமே? துர்வாசர் கட்டுரைகளே நிறைய இருக்குமே?"

"ஆமா, ஆமா.. இருக்கு.. நூறுக்கும் மேல இருக்கு..."

"அப்புறம் எழுத்தாளர் பத்தி எழுதுன சீரியஸ் ஒண்ணும் இருக்கே.."

"ஆமா.. இருக்கு?"

"குடுங்களேன் சார். தொகுதி போடச் சொல்றேன்...."

"போடலாம்..."

வினாடிகளில் மெளனம் கரைந்துகொண்டிருந்தது.

"இல்ல.. பிரச்சினை அதுவல்ல வெங்கடேஷ். புக்கா போட்டுட்டா... நண்பர்களெல்லாம் படிப்பாங்க. பரிசு, விருது, அது இதுன்னு கொடுக்க சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க... அது நமக்கு அவ்வளவா சரிப்பட்டு வராது. ரொம்பக் கூச்சமா வருது..."

உண்மையில் சில நொடிகள் நான் பேச்சற்றுப் போனேன். பரிசு வந்துவிடுமோ என்று புத்தகமே போடத் தயங்கும் வண்ணநிலவனை என்னவென்று சொல்வது?

வெங்கடேஷ்
|

This page is powered by Blogger. Isn't yours?


free hit counter
தேர்தல் செய்திகள்
களஞ்சியம்
Weblog Commenting and Trackback by HaloScan.com