<$BlogRSDURL$>

Saturday, April 10

நேசமுடன் : மடல் இதழ் 

சென்ற புதன் அன்று நேமுடன் என்ற மடல்இதழ் (Email Magazine) தொடங்கினேன். என் அட்ரஸ் புத்தகத்தில் இருந்த கிட்டத்தட்ட 366 நபர்களுக்கு அன்று அதை அனுப்பி வைத்தேன். சின்ன ஐடியாதான். சொல்லப்போனால், இன்று நாம் பேசும் மடலாடற் குழுக்களுக்கு முந்தைய வடிவம் அது. ஆனால், இன்னும் வலுவான வடிவமாகவே எனக்குத் தோன்றியது.

இந்த எண்ணம் எனக்கு உதித்தாலும், அதற்கு முன்னோடிகள் நிறையவே இருக்கிறார்கள். ஜப்பானிய பிரதமர் ஓர் மடல் இதழ் நடத்துகிறார். பிம்ளி என்றொரு ஆங்கில இலக்கிய மடல்இதழ் வெளிவருகிறது. எளிமை, நேரடித்தன்மை, வாசகனோடு அணுக்கம் இவையே மடல்இதழின் மிகப்பெரிய பலம்.

'நேசமுடன்' மடல்இதழ், நண்பர்களின் அஞ்சல்பெட்டிகளை அடைந்த சில மணித்துளிகளிலேயே சடால் சடாலென பதில்கள். வாழ்த்துக்கள். ஆலோசனைகள். கருத்துக்கள். கிட்டத்தட்ட 41 பேர் பதில் போட்டிருக்கிறார்கள். உண்மையில் திக்குமுக்காடிப் போய்விட்டேன்.

இந்த வடிவம் நண்பர்களுக்குப் பிடித்திருக்கிறது. உள்ளடக்கத்தை மேம்படுத்தவேண்டியது என் கடமை. எதைக் கொடுத்தாலும், personal touch உடன் இருக்கவேண்டும் என்பது முதல் பாடம். கற்றுக்கொண்டேன்.

நண்பர் ஐகாரஸ் பிரகாஷ், மடல்கள் விநியோகத்தில் செய்யப்படவேண்டிய முன்னேற்றம், செக்யூரிட்டி ஆகியவை பற்றி விளக்கி, உதவ முன்வந்துள்ளார். அவரது உதவியால், வரும் புதன் அன்று வரும் நேசமுடன் 2 இதழ், இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட, 745 மின்னஞ்சல் முகவரிகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.

இதைச் சேகரிக்கத் தொடங்கியபோதுதான், எனது பழைய கனவு ஒன்று நனவாகத் தொடங்கியது. இணையத்தைப் பொறுத்தவரை, வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரின் மின்னஞ்சல்களையும் ஒருஇடத்தில் சேகரித்துச் சேமித்து, முறையான டேட்டாபேஸ் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கனவே அது. 745 மின்னஞ்சல் முகவரிகளையும் அப்படித்தான் ஒழுங்காக டேட்டாபேஸாக உருவாக்கியிருக்கிறேன்.

இதேபோல், மற்றொரு கனவு, முகவரிகளைச் சேகரிப்பது. தமிழில் தரமான நூல்களையும் பத்திரிகைகளையும் படிக்கும் ஆர்வமுள்ள 10000 பேர்களாவது இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அந்தப் பத்தாயிரம் பேர்களின் முகவரியோ, மின்னஞ்சலோ, தொடர்பு எண்ணோ, அவர்களின் ஆர்வமுள்ள இலக்கியத் துறையோ, எதுவுமே புரொபைலிங் செய்யப்படவில்லை. தமிழ் பதிப்புலகம், இந்தப் பத்தாயிரம் பேர்களை நம்பித்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் யார் என்று தெரியாமலேயே வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படி ஆர்வமுள்ளவர்களின் முகவரிச் சேகரித்து, சேமித்து, செப்பனிட்டு, வடிவமைத்து வைக்க வேண்டும் என்பது எனது அவா. இத்தகைய ஓர் சேமிப்பு பல்வேறு வகைகளில், நமக்கு உதவும். புத்தகங்கள் வெளியிடுபவர்களுக்கு, புத்தகம் வாங்குபவர்களுக்கும் இடையிலான நெருக்கத்தை இத்தகைய ஓர் சேமிப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது என் எண்ணம்.

அதற்கான எளிய தொடக்கத்தை நேற்று செய்தேன். கிட்டத்தட்ட 2500 முகவரிகளை ஓரிடத்தில் இருந்து தொகுத்திருக்கிறேன். மேலும், பல்வேறு இடங்களில் முகவரிகள் திரட்டும் பணியில் இறங்கியுள்ளேன்.

நண்பர்கள் உதவ வேண்டும். நேசமுடன், மடல் இதழ் பெற விரும்புவர்கள், suve75@sify.com ஐத் தொடர்புகொள்ளுங்கள்.

அதேபோல், தங்கள் முகவரிகளைத் தரவிரும்புபவர்களும், suve75@sify.com ஐ தொடர்புகொள்ளுங்கள்.

எளிய தொடக்கம்தான். அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்ய முனைந்திருக்கிறேன். பார்க்கலாம்.

வெங்கடேஷ்
|

பரபரப்பு நேரம் 

தமிழகத் தேர்தல் சூடுபிடிப்பதற்கான காரணங்கள் தோன்றிவிட்டன.

இதுநாள் வரை, திமுக முகாம், தண்ணீர் பிரச்சினையை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வந்தது. அதிமுக முகாம், அதற்குப் பதில் தருவதும், மேன்மேலும் திமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி, குற்றம்சாட்டி, பிரச்சாரம் செய்து வந்தது.

கடைசியாக, வைகோ மீது பொடாவைக் கொண்டு வழக்குத் தொடுத்ததில் முகாந்திரம் இல்லை என்று நீதிபதி சகாரியா சொல்லிவிட்டார். அவரோடு கைதான 8 பேருக்கும் இதே நிலைதான். ஆக, ஜெயலலிதா அரசு, பொடாவை முறைகேடாகப் பயன்படுத்தியிருக்கிறது என்பதற்கு வலுவான ஓர் கருத்து உருவாகிவிட்டது.

திமுக முகாமுக்கு இனி கொண்டாட்டம்தான். வீதிக்கு வீதி, இதையே சொல்லி ஓட்டுக் கேட்கலாம். நீதி வேண்டி மக்கள் மன்றத்தின் முன் போராடலாம். வைகோ, தங்கள் மீது பரிவு மக்களுக்குப் பரிவு ஏற்பட்டிருக்கிறது என்று உற்சாகமாகக் கூறியிருக்கிறார்.

மற்றொரு பக்கம், இல. கணேசன், என்ன சொல்ல வருகிறார் என்றே புரியாமல் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். ஜெ. செய்ததை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளித்திருத்திருக்கிறார்.

ஆனால், இதை திமுக முகாம் பயன்படுத்திக்கொள்ளுமா என்று தெரியவில்லை. நான் பார்க்கும் சன் செய்திகளில், கைகோ வருவதேயில்லை. அல்லது இனிமேல்தான் அதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகவேண்டுமோ என்னவோ?

நீதிபதி சகாரியா கூறியது பரிந்துரைதான் என்று திமுக முகாம் சும்மா இருந்துவிடலாம். அல்லது, இந்த விஷயத்தில் கை வைத்தால், அது இலங்கைத் தமிழர்கள், அவர்களின் சுயநிர்ணய உரிமை போன்ற இடியாப்பச் சிக்கலில் போய் மாட்டிக்கொண்டு, தமிழக மக்களிடம் பேர் ரிப்பேர் ஆகிவிடுமோ என்ற பயம் இருக்கலாம். மேலும், வைகோவை முன்னிறுத்தி பேசுவதில், அவர் ஹீரோ ஆகிவிடுவாரோ என்ற தயக்கமும் இருக்கலாம்.

திமுக முகாம், இதை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதுநடுவே, நாளை ரஜினி மனம் திறக்கப்போகிறார். பா.ஜ.க. ஆதரவு நிலையைத்தான் அவர் எடுக்கப் போகிறார் என்று பா.ஜ.க எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். திமுக அணியில் வேறு அச்சம். ரஜினி, தங்களை ஏதும் குறைசொல்லிவிடக் கூடாதே என்ற அச்சமது.

மதுரையில் தாக்கப்பட்ட ஏழு நபர்களையும் ரஜினி சந்தித்திருக்கிறார். அவர்களை வைத்துக்கொண்டுதான் நாளை ரஜினி, பத்திரிகையாளர்களைச் சந்திக்கப்போகிறார் என்கிறார்கள். அவர் எது சொன்னாலும், அது நிச்சயம், ரஜினி ரசிகர்களுக்கு வேத வாக்காகத்தான் இருக்கப் போகிறது.

மற்றொரு பரபரப்புக்கான நேரம் தொடங்கிவிட்டது.

வெங்கடேஷ்

|

This page is powered by Blogger. Isn't yours?


free hit counter
தேர்தல் செய்திகள்
களஞ்சியம்
Weblog Commenting and Trackback by HaloScan.com